கோவைச் சிறையில் தோழர் ராமசாமி. புரட்சி - துணைத் தலையங்கம் - 31.12.1933 

Rate this item
(0 votes)

இந்திய சட்டசபைத் தலைவரின் சந்திப்பு கண்ணம்மாள் ஜாமீனில் விடுதலை 26-12-33 உ அன்று 11 மணிக்கு கோயம்புத்தூர் ஜில்லா மாஜிஸ்டிரேட் தோழர் வெல்ஸ் ஐ.சி.ஏஸ். முன்பு தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்களின் சகோதரியும் குடி அரசுப் பத்திரிகையின் பிரசுதாரருமான தோழர் கண்ணம்மாளை ஜாமீனில் விடவேண்டுமென கொடுத்திருந்த மனுவின் பேரில் விவாதம் நடைபெற்றது. தோழர் கண்ணம்மாள் சென்ற வாரம் தோழர் ராமசாமியுடன் கைது செய்யப்பட்ட விவரம் நண்பர்களுக்கு ஞாபகமிருக்கலாம். ஜாமீனில் தோழர் கண்ணம்மாளை விடவேண்டுமென்று தோழர் டிடி ரத்தினசபாபதி பிள்ளை இன்று கலெக்டர் முன்பு வாதிக்கையில் அக்டோபர் மாதம் 29 தேதி வெளிவந்துள்ள குடி அரசுப் பத்திரிகையில் பிரசுரம் செய்யப்பட்டுள்ள கட்டுரைக்கு தோழர் கண்ணம்மாள் நேர் ஜவாப் தாரியல்ல வென்பதாகவும் க்ஷ வியாசமானது வாக்குத்தாரர்களுக்குக் கூறப் பட்ட ஓர் சாதாரண போதனைதான் ஆகும் என்பதாகவும். எனவே அது ராஜ நிந்தனையாகாது என்பதாகவும், இப்போது வியாசத்தை பற்றி யோசிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறியதோடு எதிரி ஒரு பெண்ணாக இருப்பதை முன்னிட்டும், தேக அசௌகரியத்துடன் இருப்பதை முன்னிட் டும். சாட்சிகள் கலைக்கப்படுவார்கள் என்று நினைப்பதற்கு இடமில்லாமல் இருப்பதை முன்னிட்டும், தோழர் கண்ணம்மாளைஜாமீனில் விட வேண்டு மென்று பல வழக்குகளில் நடந்த மேற்கோள்களை எடுத்துக்காட்டி வாதாடினார். 

ஜாமீனில், தோழர் கண்ணம்மாளை விடுவதை, மனுவில் கண்டுள்ள காரணங்களைக் கொண்டு எதிர்ப்பதாக போலீஸ் பிராசிக்கியூட்டிங் இன்ஸ் பெக்டர் தோழர் வரதராஜுலு நாயுடு கூறினார். இது விஷயமாக யோசிக்கச் சிறிது சாவகாசம் வேண்டும் என்று கூறினாலும், தோழர் கண்ணம்மாள் நோய்வாய்ப்பட்டிருப்பது வாஸ்தவந்தான் என்பதாகவும் கூறினார். 

 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு மாஜிஸ்திரேட் தோழர் கண்ணம்மாளை ஜாமீனில் விடுதலை செய்ய உத்திரவிட்டிருப்பதாகக் கூறினார். 

தோழர் டிடிஆர் பிள்ளைக்கு உதவியாக தோழர்கள் ஈரோடு வேணு கோபால், சென்னை கே.எம்.பாலசுப்பிரமணியம், கோவை நஞ்சுண்டையா முதலிய வக்கீல்கள் ஆஜரானார்கள். 

"புரட்சி” பத்திரிகை பிரசுரகர்த்தாவும் பதிப்பாளருமான தோழர் எஸ். ஆர். கண்ணம்மாளை, அவர்மீது கொண்டு வரப்பட்டிருக்கும் வழக்கு விசாரனை முடியும் வரை ஜாமீனில் விட வேண்டுமென கோவை ஜில்லா மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் மனுச் செய்து கொள்ளப்பட்டது. ஜில்லா மாஜிஸ் டிரேட் அவரை ரூ.500 சொந்த ஜாமீனும், அதே துகைக்கு மற்றும் ஒரு நபர் ரூ.500 ஜாமீனும் கொடுத்தால் விடுதலை செய்யும்படி உத்திரவிட்டார். 

தோழர் கண்ணம்மாள் 26 உ ஜாமீன் கொடுத்து விடுதலையடைந்து அன்றிரவே மெயிலில் ஈரோடு வந்து சேர்ந்தார். தோழர் ஈ.வெ. ராமசாமி, எஸ்.ஆர். கண்ணம்மாள் இவர்கள் இருவர்மீதும் கொண்டு வரப்பட்டிருக்கும் வழக்கு ஜனவரி மாதம் 4 தேதி கோவை ஜில்லா மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரணை வரும். 

தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்களை கோவைச் சிறையில் இந்திய சட்டசபைத் தலைவர் தோழர் சர். ஆர். கே. ஷண்முகம் பி.ஏ., பி.எல்., எம்.எல்.ஏ.. அவர்களும், தோழர்கள் ஈ.வி. கிருஷ்ண சாமி. எஸ். ராமசாமி. கே.எம். பாலசுப்பிரமணியம், பி.ஏ., பி.எல்., வி. வேணுகோபால் பி.ஏ., பி.எல்., முதலியவர்களும் சென்று பார்த்து வந்தார்கள். 4-1-34ல் தமிழ்நாடு ஆசிரியர் தோழர் டாக்டர் பி. வரதராஜுலு அவர்கள் பார்த்து வரப்போவதாகத் தெரிய வருகிறது. 

புரட்சி - துணைத் தலையங்கம் - 31.12.1933

 
Read 44 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.